”விடுதலைக்கு மகளிரெல்லாம்
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா!
”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.
ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.
கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்)
கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார்.
எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?
“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.
1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி
ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் :
1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்
கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார்.
இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்)
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார்.
இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம்.
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.
ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது!
சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.
அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்!
”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!
No comments:
Post a Comment